சிறுகதை
யாரது ?
முத்துவின் மனதில் ஏதோ தடுமாற்றம். " நான் காண்பது உண்மைதானா? இல்லை கனவா? உண்மையானால்.... எனக்கு என்ன நேரும்? நான் இறந்து விடுவேனா?" என்ற குழப்பத்துடன் கண்ணீர் துளிகள் கன்னத்தை நனைத்தன.
"காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை. கத்தினாலும் யார் காதிலும் விழப் போவதில்லை. என்னை நான் தான் காப்பாற்ற வேண்டும். நான் தான் இப்போ விஜய் அஜித் போல செயல்படனும்," என்ற முடிவுக்கு வந்தான் முத்து. குனிந்து, கீழே கிடந்த கட்டைகளில் தட்டுப்பட்டதிலே பெரிய கட்டையை எடுத்தான். கண் முன்னே நின்றுக் கொண்டிருந்த இருளை நோக்கி நடந்தான்.
இருளை நோக்கிச் செல்ல செல்ல இருதயம் வெடித்து சிதறுவது போல் துடிதுடித்தது. காலில் நடுக்கம். கையில் பதற்றம். கண்ணில் பயம். இருந்தும் அச்சம் தவிர் என்ற பாரதியின் வரிகளை நினைத்து, நாவில் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை முனுமுனுத்து நடக்கலானான்.
சற்றும் எதிர்பாராத தருணத்தில் கொலுசின் ஓசை. அவ்வளவுதான், உச்சி முதல் உள்ளங்கால் வரை பயம் ஊடுருவியது. அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு முன் "யா.... யாரது? யாரது? வெளியே வாங்க. என் கையில் கட்டை இருக்கு. அடிச்சிருவேன். யாரது? வெளியே வாங்க," என்ற தழதழத்த குரலில் கேட்டான்.
மறுமுனை எந்த ஓசையும் இன்றி அமைதியாக இருந்தது.
மீண்டும் தைரியத்தை வரவைத்துக் கொண்டு கேள்வியைக் கேட்டான்.
அந்த இருள் அவனை நோக்கி வர ஆரம்பித்தது. அதைக் கண் சிமிட்டாமல் உற்று நோக்கிய போது, திடீரென்று, யாரோ அலறும் சத்தம் அவன் காதைக் கிழிப்பது போல் இருந்தது. அவ்வளவுதான், பயம் தலை உச்சிக்கு ஏறி தன்னையும் மறந்து மூர்ச்சித்துத் தொப்பென்று கீழே விழ்ந்தான்.
மறுநாள்.
சூரிய ஒளி கத்திபோல் குத்த படுக்கை விட்டு எழுந்து அமர்ந்தான். "நான் கனவு கண்டேனா? நான் அனுபவிச்சது உண்மையா? எனக்கு ஒரே குழப்பமா இருக்கே?" என்று தனக்குதானே கேள்விகளை அடுக்கிக் கொண் போனான். சட்டென்று திறக்கப் பட்ட கதவால் திடுக்கிட்டு திரும்பினான்.
"என்னடா? அப்புறம் எப்படி இருக்க? ராத்திரியில தைரியமா தனியா ஹொஸ்தலுக்கு வந்திடுவேனு சவால் விட்ட. கமல் கத்துனதிக்கே மயக்கம் போட்டு விழுந்திட்ட!" இதுல நான் உன் கைய பிடிச்சி இழுத்திருந்தா என்னா ஆயிருப்பியோ?" என்ற அமுதனின் பதில் முத்துவின் கேள்விகளுக்குப் பதிலாய் அமைந்தது.
Comments
Post a Comment