தொடர்கதை
குபேரவர்மன் : பாகம் 1 இறை தரிசனம்
காலை மணி 6.00. அலாரம் அடித்தும் எழ மறுக்கும் குபேரனை அம்மா திட்டினார். அது பள்ளி விடுமுறை காலம். 10 வயது பிள்ளைக்கு நல்லா தூங்கும் காலம். ஆனால், அம்மாவைப் பொருத்தவரை விடுமுறையோ இல்லையோ காலையில் சூரியன் உதிக்கும் முன் எழுவது ஒழுக்கம்.
வயதான தாத்தா தட்டு தடுமாறி எழுவது போல் சிரமப்பட்டு படுக்கையை விட்டு எழுந்தான். நேராக குளியல் அறையை நோக்கி நடந்தான். குளித்து முடித்து வந்தவன், உடனே "பசிக்குதும்மா.... என்ன சமைச்சிங்க?" என்று கேட்டுக் கொண்டே உணவு பாத்திரங்களைத் திறக்க முற்பட்டான். அம்மாவின் அதட்டல் குரளைக் கேட்டுப் பூனைப்போல் சத்தமில்லாமல் இடத்தை விட்டு நகர்ந்தான். சென்று தன்னை அலங்கரித்துக் கொண்டு இறை வழிபாட்டில் ஈடுபட்டான்.
பூஜை அறையில் இருந்து மந்திர ஓசை பலமாக கேட்டது. தனக்கு விருப்பமான அனுமானைப் பூஜித்தான். 108 முறை மந்திரத்தை ஓதினான். ஒவ்வொரு முறையும் அவன் கூறுகையில், அவன் அம்மா அந்த மந்திர சக்தியை உணர்வார். ஆனால், குபேரனைப் பொருத்தவரை பூஜிப்பதும் மந்திரம் ஓதுவதும் அம்மாவின் கட்டளை மட்டுமே.
பூஜை முடிந்து வந்தவுடன் அம்மா பரிமாற உணவு உண்டான். உணவு சரிமான ஆகுவதற்குக் கார்டூன் பார்க்கச் சென்றான். அம்மா விரைவாக வந்து "குபேரன், இன்று அனுமன் ஜெயந்தி. வா.... கோவிலுக்குப் போலாம். சீக்கிரம் கிளம்பு", என்றார்.
அறை மணி நேரத்தில் கிளம்பி கோவிலை வந்தடைந்தனர். அஃது ஒரு பழங்கோயில். மக்கள் நடமாட்டம் சற்று குறைவான இடம். பராமரிக்க ஆளின்றி விடுபட்ட கோயில். காளி சிலையும் சிறு தூரத்தில் அனுமன் சிலையும் மட்டுமே இருக்கும். யாரால் கட்டப்பட்டது? எப்போது கட்டப்பட்டது? போன்ற கேள்விகளுக்கு அங்கு தலைமுறை தலைமுறையாக வாழும் குடும்பங்களுக்கே தெரியாது. இவர்கள் இருவரும் அடிக்கடி சென்று பூஜித்து வருவது வழக்கம். காரணம், குபேரனின் இஷ்ட தெய்வம் குடிக்கொண்ட கோவில்.
எப்பொழுதும் போல் வணங்கி கொண்டிருந்த குபேரனுக்குத் திடீரென ஒரு தடுமாற்றம். சட்டென்று கண்களைத் திறந்தான். ஒளியின் வேகம் அவன் கண்களைக் கூசச் செய்தன. நன்றாக உற்று நோக்கினான். அனுமானின் சிலையில் ஏதோ ஓர் ஒளி எழுவதைக் கண்டான். அருகில் இருந்த அம்மாவைக் கூப்பிட்டான். தாயோ ஆழ்ந்த பக்தியில் அழைப்பது அறியாது இருந்தார். குபேரன் மீண்டும் ஒளியை உற்று நோக்கினான்.
தொடரும்....
Comments
Post a Comment